Skip to main content

பாரதி யார் ?

இன்று மஹாகவி பாரதியின் நினைவு தினம். செப்டம்பர் 11 என்னும் நாள் உலக மக்களிடையே பேரழிவுக்கான ஒரு தினமாய் ஆனது 2001ஆம் ஆண்டு அல்ல. என்னைப்  பொருத்தவரை அது 1921 ஆம் ஆண்டு. 38 வயதே ஆன பாரதி இந்த மண்ணை விட்டு சென்ற தினம். 

நாம் மிகுந்த பெருமை கொள்ளத்தக்க 10 இந்தியர்களை பட்டியலிட்டாலும் அதில் பாரதியின் பெயர் முன்னணியில் இருக்கும் என்பது எனது எண்ணம். பாரதி வாழ்ந்த காலத்தையும் , இடத்தையும் கருத்தில் கொள்ளும் பொழுது , அவருடைய கவிதை மற்றும் உரைநடைகளின் கருத்து வீச்சு நம்மை பிரமிக்க வைக்கிறது. தேடத்  தேட பாரதி குறித்த அரிய தகவல்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. டைட்டானிக் கப்பல் மூழ்கிய செய்தி குறித்துக் கூட  தமிழ் பத்திரிக்கைகளில் அன்றே பதிவு செய்திருக்கிறார் பாரதி. அவருடைய பன்மொழிப் புலமையே இதற்க்கு வேராக இருந்துள்ளது. 

பாரதி ஒரு கவிஞர் மட்டும் தானா? இல்லை. அவர்  ஒரு தத்துவம் ; ஒரு வாழ்க்கை முறை ; பாரதியாய் ஒரு நிமிடம் இருந்து யோசித்துப்  பாருங்கள். மிக உயரிய சிந்தனைகளுடன் வாழ்ந்த ஒரு மனிதன், தான் வாழும் காலத்தில் அவனுடைய உறவுகளால், சமூகத்தால் புறக்கணிகப்பட்ட ஒரு நிலை. அவர் கொண்ட கொள்கையில் அவரது தளர்வறியா பிடிப்பும், நம்பிக்கையும் பாரதியின் விஸ்வரூபமாய் நம் மனதில் விரிகிறது.



எனது பள்ளிப்பருவத்தில் விவேகானந்தர் வாசகர் வட்டம் என்னும் அமைப்பில் இருந்த பொது அடிக்கடி பாடப்பட்ட பாரதியின் ஒரு பாடல் , என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. பாரதியின் நினைவு நாளில் நம் அனைவரின் சிந்தனைக்கும்:

ஊருக்கு உழைத்திடல் யோகம் - நலம்
ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும் - உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ் ஞானம்

உற்றவர், நட்டவர், ஊரார் - இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம் - இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை

பக்கத்தில் இருப்பவர் துன்பம் - தனைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி
ஒக்கத் திருத்தி உலகோர் - நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி

இன்பமும் ஓர்கணத் தோற்றம்-இங்கு
இளமையும் செல்வமும் ஓர்கணத் தோற்றம்;
துன்பமும் ஓர்கணத் தோற்றம்-இங்கு
தோல்வி முதுமை ஒருகணத் தோற்றம்.

நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் - இந்த
நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின்
எந்தக் குலத்தினரேனும் - உணர்வு
இன்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.


வையகம் காப்பவரேனும் - சிறு
வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்
பொய் அகலத் தொழில் செய்தே - பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.

ஒன்றுண்டு மானிட சாதி-பயின்று
உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்;
இன்று படுத்தது நாளை-உயர்ந்
தேற்றம் அடையும் உயர்ந்த திழியும்.


பாரதியின் தகுதிக்கு  1% அங்கிகாரம் கூட நாம் அவருக்கு வழங்கவில்லை என்பதே எனது எண்ணம். பாரதி 10 ஆண்டுக்களுக்கும் மேல் வாழ்ந்த புதுவையில் வாழும் பாக்கியம் கிடைத்தை எண்ணி எண்ணி மகிழ்கிறேன். பாரதியின் கவிதைகளை வாசிப்பதோடு நின்று விடாமல், அவர் சொன்ன எதாவது ஒரே ஒரு கருத்தை மட்டுமாவது நம்முடைய செயல்பாட்டில் கொண்டு வருவோமாயின் அதுவே பாரதிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாய் அமையும்.

Comments