இசை, புத்தகங்கள் மற்றும் பூனைகள் இவை முரகாமியின் உலகில் சிறப்புப் பிரஜைகள். ஹாருகி முரகாமி எழுதும் கதைகள் மட்டுமல்ல அவரின் வாழ்கைக் கதையே வசீகரமானது தான்.
எளிமையான வார்த்தைகளில் வாழ்கையின் பெருஞ்சிக்கல்களை அநாயாசமாகச் சொல்லிச் சொல்கிறார் முரகாமி. தனித்துவமானது முரகாமியின் உலகம். மாயமும் எதார்த்தமும், மாலை நேர வானில் தோன்றும் எண்ணற்ற வண்ணங்கள்போல, வடிவங்கள்போல ஒன்றிணைந்து ஜாலங்கள் செய்யும் உலகம் அது. வானம் என்றுமே புதியது தான். முரகாமியின் படைப்புகளும் அது போலவே.
கனவுகளை, விரும்பும் வண்ணம் விழித்திருக்கும் போதே தன்னால் காண இயல்வதும், அவற்றை நிறுத்தவும் தொடரவும் முடிவதே தன் கதைகளின் தனித்தன்மைக்குக் காரணம் என்கிறார் முரகாமி.
முரகாமி எழுதத் தொடங்கியதே ஒரு மாய நிகழ்வு தான். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தெட்டாம் ஆண்டு. பளிச்சென்ற ஏப்ரல் மாதச் சூரியன் டோக்கியோ வானில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. முரகாமி ஜிங்கு விளையாட்டரங்கிற்கு பேஸ் பால் ஆட்டம் பார்க்கச் சென்றிருந்தார். கூட்டம் அதிகமொன்றுமில்லை. புல்வெளியில் சாய்ந்தபடி ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தார் முரகாமி.
ஆசிர்வதிக்கப்பட்ட அந்தவொரு நொடிப்பொழுதில் திடீரென, “என்னால் நாவலொன்று எழுத முடியும்” என்று முரகாமிக்குத் தோன்றியது.
“வானிலிருந்து ஏதோவொன்று மெதுவாய்க் கீழிறங்கியது போல உணர்ந்தேன். நான் என் கரங்களில் அதைப் பற்றிக்கொண்டேன். அது என்னிடம் ஏன் வந்து விழுந்தது என்று அன்றைக்கு எனக்குத் தெரியாது. இன்றைக்கும்.” தான் எழுத உந்தப்பட்டதை இவ்வாறு தான் விவரிக்கின்றார் முரகாமி.
புத்தருக்குப் போதி மரம். முரகாமிக்கு பேஸ் பால் அரங்கம்.
வீட்டிற்குத் திரும்பிச் செல்லும் வழியில், காகிதங்களும், பவுண்டெய்ன் பேனா ஒன்றும் வாங்கிச் சென்றார் முரகாமி. தன்னால் எழுத இயலும் என்ற எண்ணமே அவருக்குப் புத்துணர்வைத் தந்தது.
இவையெல்லாம் நிகழும்பொழுது, முரகாமி ஜாஸ் பார் ஒன்று நடத்தி வந்தார். சராசரி மனிதர்களின் வாழ்வில் பட்டப்படிப்பு, வேலை பின்னர் திருமணம் என்ற வரிசையிருக்கும். முரகாமி சாதாரணமானவர் இல்லையே. அவரது வாழ்வில் முதலில் திருமணம், ஜாஸ் க்ளப், பட்டம் பெறுவது என்ற வரிசை.
வசீடா (Waseda) பல்கலைக்கழகத்தில் நாடகவியல் படித்தார் முரகாமி. அங்குதான் அவரது மனைவி யோக்கோவை முதன்முதலாகச் சந்தித்தார்.
யோக்கோவும், முரகாமியும் படித்து முடித்தபின் கட்டாயம் வேலைக்குச் செல்லக் கூடாது என்று முடிவெடுத்தனர். ஜாஸ் பார் ஒன்றை ஆரம்பித்தனர். அங்கு எப்பொழுதும் முரகாமியால் தனக்குப் பிடித்த இசையை ரசிக்க முடிந்தது. ஆனாலும் வியாபாரம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இடத்தை மாற்றிப் பார்த்தனர். பியானோ இசை நிகழ்ச்சி என்றெல்லாம் பலவும் முயன்று பார்த்தனர். ஆயினும் கஷ்ட ஜீவனம் தான்.
வங்கியில் கடன். நாள் முழுவதும் சாண்ட்விச் செய்வது, மோசமான வாடிக்கையாளர்களை எதிர்கொள்வது இவ்வாறு தான் போய்க்கொண்டிருந்தது முரகாமியின் வாழ்க்கை.
ஆனபோதும் தினமும் ஒரு ட்ரெய்னில் ஏறி வேலைக்குச் சென்று, முதலாளி என்ற ஒருவருக்குப் பதிலளிப்பது என்பதை முரகாமியால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அதற்கு இந்தச் சூட்டையே சகித்துக்கொள்ளலாமென முடிவெடுத்தார்.
கடன் சிக்கல் அதிகரித்துக் கொண்டே வந்தது. நாளைக் காலை வங்கித் தவணை கட்ட வேண்டும். கையில் பணமில்லை. யோக்கோவும், முரகாமியும் ஓர் இரவுப் பொழுதில் அந்தத் தெருவில் செய்வதறியாது நடந்து கொண்டிருந்தனர்.
தெருவோரமாய்க் கிடந்த அந்தப் பணம் திடீரென்று அவர்கள் கண்களில் பட்டது. கையிலெடுத்தனர். எண்ணிப்பார்த்தனர். மிகச் சரியாக நாளை அவர்கள் வங்கிக்குச் செலுத்த வேண்டிய அதே தொகை தான். திகைத்தனர். இவ்வாறு முரகாமியின் வாழ்வெங்கும் எதார்த்தமா, மாயமா என்று பிரித்தறிய இயலாத நிகழ்வுகள் நிறைந்துள்ளன.
இந்த நிலையில் தான் காகிதமும், பவுண்டெய்ன் பேனாவும் வாங்கி வந்திருந்தார் முரகாமி. ஏற்கனவே ஜாஸ் பாரில் நாள் முழுவதும் கடின உழைப்பு. ஆயினும் இரவு நேரத்தில் தனக்குக் கிடைத்த மிகக்குறைந்த ஓய்வு நேரத்தை எழுதுவதற்கு ஒதுக்கினார் முரகாமி. சமையலறை மேஜையில் தான், தனது முதல் நாவலை எழுதினார் முரகாமி.
ஆறு மாதங்களில் முரகாமியின் முதல் நாவலின் ( “Hear the Wind Sing” ) முதல் ட்ராப்ட் தயாரானது. பேஸ் பால் சீசனும் முடிவுக்கு வந்தது. முன்பு அவர் பார்க்கச் சென்றிருந்த ஆட்டத்தில் நிச்சயம் தோற்றுப் போகும் என்று பெரும்பாலானோர் எண்ணிய அணி அந்தச் சீஸனை வென்றது. முரகாமியின் நாவல்கள் ஒரு சீஸன் மட்டுமல்ல, இனி வரப்போகும் பல தசாப்தங்களை வெல்ல இருப்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்காது.
தான் எழுதியிருந்த முதல் பிரதியைத் திரும்பத் திரும்ப வாசித்துப் பார்த்தார் முரகாமி. ஏதோ சரியில்லை என்று தோன்றியது. தான் ஏற்கனவே படித்திருந்த ரஸ்ய நாவல்கள், அமெரிக்க நாவல்கள், த்ரில்லர் கதைகள் இவற்றின் பாதிப்பு அதிகமிருந்தது. தனக்கே பிடிக்காத இது, ஜப்பானிய வாசகர்களுக்குக் கண்டிப்பாய்ப் பிடிக்காது என முடிவெடுத்தார்.
என்ன செய்யாலமென்று ஆழமாய் சிந்தித்தார். கண் முன்னிருந்த காகிதங்களையும், பவுண்டெய்ன் பேனாவையும் ஒதுக்கி வைத்தார். உள்ளிருந்த ஆங்கில டைப்ரைட்டரை வெளியே எடுத்தார்.
ஆங்கிலத்தில் தனது நாவலை டைப் செய்யத் தொடங்கினார். முரகாமியின் ஆங்கில அறிவு விஸ்தீரனமானது அல்ல. அவரறிந்த ஆங்கிலச் சொற்கள் குறைவு. இலக்கியத்தனமான ஆங்கில வாக்கிய அமைப்பின் ஆழங்கள் அவருக்குத் தெரியாது. தெரிந்த வார்த்தைகளில் எழுதத் தொடங்கினார். தொடக்கத்தில் இச்செயல்பாடு மிகக் கடினமாக இருந்தது. ஆனால் போகப்போக அவருக்கென்று ஒரு ஸ்டைல் உருவானது.
டைப் செய்து முடித்திருந்த ஆங்கில வெர்ஷனை ஜப்பானிய மொழிக்கு மொழிபெயர்த்தார். இது வார்த்தைக்கு வார்த்தை சற்றும் மாறாமால் மொழிபெயர்ப்பது. முரகாமி இதை “Transplanted” என்கிறார். விளைவு அவரது ஜப்பானிய மொழி நடை மிகவும் புதிதாக இருந்தது.
ஓர் அந்நிய மொழியில் தனது நாவலின் ஒரு வெர்ஷனை எழுதி, தனது தாய்மொழியில் மொழிபெயர்ப்பதெல்லாம் பிறரால் கடுமையாக விமர்சிக்கப்படும். ஆனால் அதையெல்லாம் அவர் பொருட்படுத்தவேயில்லை. ஏனென்றால் அவர் பெயர் ஹாருகி முரகாமி.
அந்தப் பேஸ் பால் ஆட்டம் நடந்து முடிந்து ஓராண்டாகி இருந்தது. முரகாமி, தன் முதல் நாவலை, மலரும் எழுத்தாளர்களுக்கான, Gunzo இலக்கியப் பரிசுப் போட்டிக்கு அனுப்பியிருந்தார். அவரது நாவல், முதல் ஐந்து நாவல்கள் பட்டியலில் இருப்பதாய் அவருக்கு அழைப்பு வந்தபோது முரகாமி நம்பவில்லை. “Hear the Wind Sing” ஒரு முழுமையான நாவல் என்று கூடச் சொல்ல முடியாது.
அவரது மனைவி யோக்கோவுடன் நடைப்பயிற்சிக்குச் சென்றார். நடந்து கொண்டிருக்கும்போது, ஆசிர்வதிக்கப்பட்ட அந்த நொடியில் திடீரென, “எனக்கு இந்தப் பரிசு நிச்சயம் கிடைக்கும். இனி நான் எழுதப் போகும் நாவல்கள் பெருவெற்றியடையும். இது சர்வநிச்சயமான ஒன்று” என முரகாமிக்குத் தோன்றியது. அவ்வாறே நிகழ்ந்தது என்பது தான் உண்மை.
இப்படியெல்லாம் தோன்றுமா என்று கேட்டால், சராசரி மனிதர்கள் “இல்லை” என்று தான் கூறுவார்கள். தர்க்கப்படியும் அது தான் சரி. ஆனால் முரகாமியின் உலகில் சராசரி தர்க்க விதிகள் மாற்றப்பட முடியாதவை அல்ல. மாயமும் எதார்த்தமும் குழைந்து குழைந்து புதியதோர் உணர்வு நிலையை ஏற்படுத்துவதே முரகாமியின் சிறப்பு.
முரகாமியின் படைப்புகள் மாய எதார்த்தம் என்னும் சிலிர்ப்பூட்டும் உலகை நம் கண்முன் கொண்டு வருவன.
தொடர்ந்து முரகாமி எழுதிய நாவல்கள் உலகப் புகழ் பெற்றன. அவரது “Norwegian Wood”, “1Q84”, “Kafka on the Shore”, “The Wind-up Bird Chronicle” போன்ற நாவல்கள் அவருக்கு உலகெங்கும் பல லட்சம் வாசகர்களைப் பெற்றுத் தந்தது. எப்போது புதிய நாவல் வருமென்று ஏங்கி ஏங்கிக் காத்துக்கிடக்கும் எண்ணற்ற வாசகர்கள் தான் முரகாமியின் சொத்து.
இது போகச் சிறுகதைத் தொகுப்புகள் வந்துள்ளன. முரகாமியின் புனைவல்லாத எழுத்துகளும் சிறப்பானவை. நெரிசல் மிகுந்த டோக்கியோவின் சப்வே ட்ரெய்னில் நடந்த “சாரின்” (Sarin) விஷ வாயுத்தாக்குதலில் பலர் பலியாயினர். இத்தாக்குதலில் பாதிக்கப்பாட்டோரை பேட்டியெடுத்து அவர்களது மனஉளைச்சல்களைப் பதிவு செய்தார் முராகாமி. “Underground” என்னும் பெயரில் இப்புத்தகம் வெளிவந்துள்ளது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் அவரது படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. சர்வ சாதாரணமாக மில்லியன் காப்பிகள் விற்கின்றன. தமிழ் நாவல் ஒன்று மில்லியன் காப்பிகள் விற்கும் பொற்காலம் வருமா? பேராசை தான். ஆயினும் முரகாமியின் வாசகனாய் நான் நம்புவது, நடக்க இயாலாதது என்று ஒன்றில்லை என்பது தான். நிச்சயம் நிகழட்டும்.
முரகாமியின் கதை மாந்தர்கள் படைக்கப்பட்டிருக்கும் விதம் அலாதியானது. முரகாமியால் மட்டுமே அதைச் செய்ய இயலும். அவர்கள் ஏதோ ஒன்றைத் தொலைத்தவர்களாக, அதைத் தேடிப் பயணிப்பவர்களாக இருக்கின்றனர். இப்பயணம் புறவெளியிலும் அகவெளியிலும் இணைந்தே தொடர்கிறது. அவரின் கதை மாந்தர்கள் தனிமைவாசிகளாக உள்ளனர். தனிமை விரும்பிகளாவும்.
முரகாமியின் நாவல்கள் பலவும் தீர்க்கமான முடிவு என்று ஒன்று இல்லாதவை. வாசகர்களைத் தாங்களும் அக்கதைகளின் ஓர் அங்கம் என்று உணரச் செய்தல் முரகாமியின் முத்திரை. அவரது நாவல்கள் ஒவ்வொன்றும் ஒரு வாழ்க்கையின் குறுக்கு வெட்டுத் தோற்றம்.
அனைத்துப் புதிர்களுக்கும் விடை கிடையாது என்பது தான் நமது வாழ்க்கையின் சிறப்பு. முரகாமியின் கதைகளும், சில புதிர்களை, வாழ்க்கை போல வாசகர்களிடம் விட்டுவிடுகிறது. எல்லாப் புதிர்களையும் தீர்க்க முயல்வதிலிருந்து, புதிர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் என்னும் மனநிலைக்கு வாசகர்களை முரகாமி இட்டுச்செல்கிறார்.
குழந்தைப்பருவத்தில் முரகாமியுடன் விளையாட வீட்டில் வேறெந்த குழந்தையும் இல்லை. அவருக்குச் சகோதரரோ, சகோதரியோ கிடையாது. ஆகவே தனது தனிமைக்குத் துணையாகப் பூனைகள், புத்தகங்கள் மற்றும் இசை தான் இருந்தன. அவரது படைப்புகளெங்கும் இம்மூன்றும் நிறைந்து காணப்படுகின்றன.
பூனைகள் ஜப்பானிய கலாசாரத்தில் நல் அதிர்ஷ்டத்தின் குறியீடாக உள்ளன. ஜப்பானின் நெருக்கமான, இடப்பற்றாக்குறையுடைய வீடுகளில் பூனை வளர்ப்பது நாய் வளர்ப்பதை விட எளிதானது. எனவே ஜப்பானியர்கள் பூனைகளை மிகவும் நேசிக்கின்றனர்.
பூனைகளைத் திரும்பத் திரும்ப எழுதும் முரகாமி தன் வீட்டில் பூனை வளர்ப்பதில்லை. தான் ஓடும் தெருக்களில் மூன்று நான்கு பூனைகளைத் தமக்குத் தெரியும் என்கிறார் முரகாமி. அப்பூனைகளுக்கும் அவரைத் தெரியுமாம்.
முரகாமியின் கதைகளில் வரும் பூனைகள் வெறும் வளர்ப்புப் பிராணிகள் அல்ல. அவை கதையின் போக்கைப் தீர்மாணிப்பவையாகக் கூட இருக்கின்றன.
முரகாமியின் படைப்புகளுடன் ஆழ்ந்து உறவாடும் வாசர்களால், கதைகளின் அடிநாதமான இசையை உணரலாம். முரகாமி தனது கதைகள், இசையென்னும் மாய இணைப்பினாலேயே கட்டப்பட்டிருக்கின்றன என்கிறார்.
தனிமையும் காத்திருப்பும் அவரது கதை மாந்தர்கள் திரும்பத் திரும்ப எதிர்கொள்பவையாக உள்ளன. முரகாமி சொல்லும் தனிமை என்பது, கழிவிரக்கம் கொள்ளும் தனிமை அல்ல. அவரது கதை மாந்தர்களின் தனிமை அவரது குணாதிசியம்.
முரகாமியின் கதைகளில் உறுதியான விதிகள் இல்லை. ஆனால் நாவல் எழுதும் பொழுது முரகாமி கடைபிடிக்கும் ஒழுக்கம் என்பது அசாத்தியமானது. காலை நான்கு மணிக்கு எழுவது. நான்கு முதல் ஆறு மணி நேரம் எழுதுவது. பின்னர் பத்து கிலோமீட்டர்கள் ஓடுவது. மாலையில் இசை. இரவு ஒன்பது மணிக்கு உறங்கச் சென்று விடுவது.
இந்த விதிகளைச் சற்றும் பிசகாமல் கடைபிடிப்பது மிக மிக அவசியம் என்கிறார் முரகாமி. திரும்பத் திரும்பச் செய்தலில் தான் மாயம் இருக்கிறது. ஒரு கட்டத்தில் அது தன்னை ஒரு மனோவசிய நிலைக்கு இட்டுச் செல்வதாகக் கூறுகிறார். அதே மனநிலையில் இருப்பதற்கு உடல் வலிமை மிகவும் அவசியம்.
உடலினை உறுதி செய்யாத எழுத்தாளர்களால் தொடர்ந்து சிறந்த படைப்புகளை வழங்க முடியாது என்பது முரகாமியின் உறுதியான நம்பிக்கை.
ஒவ்வொரு வருடமும் ஒரு மாரத்தானாவது ஓடி விடுகிறார் முரகாமி. ஒரு மாரத்தான் என்பது 42.195 கிலோமீட்டர்கள். அல்ட்ரா மாரத்தான் என்று ஒன்று உள்ளது. நூறு கிலோமீட்டர்கள் ஓடுவது. முரகாமி அல்ட்ரா மாரத்தானும் ஓடி இருக்கிறார். நூறு கிலோமீட்டர் அல்ட்ரா மாரத்தான் ஓடுவது என்பது மிகக் கடுமையான ஒன்று தான். ஆனால் முரகாமியின் உலகில் இயலாதது என்ற ஒன்றில்லை.
ஓடும்போது எது குறித்தும் சிந்திக்காமல் இருப்பது தான் தொடர்ந்து எழுதுவதற்கான பயிற்சி என்கிறார் முரகாமி. “What I Talk About When I Talk About Running” என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார் முரகாமி. அவரைப் பற்றி அறிந்து கொள்ள முனைபவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
முரகாமியின் படைப்புகளை வாசிப்பவர்கள், ஒன்று அவரை உருகி உருகி நேசிப்பவர் ஆகின்றனர் அல்லது அவரது படைப்புகளை முற்றிலும் வெறுப்பவர் ஆகின்றனர். இடைப்பட்ட நிலை என்ற ஒன்றே கிடையாது. முரகாமியின் படைப்புகளை விமர்சிப்போரின் ஆகப் பெரிய குற்றச்சாட்டு அவர் திரும்பத் திரும்ப ஒரு சில விஷயங்களைப் பற்றி மட்டுமே எழுதுகிறார் என்பதே. இதுகுறித்து அவரிடமே கேட்டபோது அவர் சொன்ன பதில் “என்னால் முரகாமி போல மட்டுமே சிந்திக்கவும் எழுதவும் முடியும்” என்பதே.
முரகாமியைச் சுற்றி நடக்கும் மற்றும் ஒரு விவாதம் “நோபல் பரிசு” பற்றியது. அவர் பத்தாண்டுகளுக்கும் மேலாகவே உறுதியான நோபல் போட்டியாளராகக் கருதப்படுகிறார். இந்தாண்டேனும் அவருக்கு நோபல் வழங்கப்படும் என்ற பேரார்வம் உலகெங்கிலும் விரவிக்கிடக்கும் அவரது எண்ணற்ற ரசிகர்களிடம் இருந்தது. முடிவு வழக்கம் போலவே இருந்தது.
முரகாமியின் படைப்புகள் தீவிர அரசியல் சாயமற்றவை. அவை மனிதர்களின் உள்மன அசைவுகளையும், வேட்கைகளையும் மையமாகக் கொண்டவை. எனவே அவரது எழுத்து அரசியல் மாற்றம் என்ற பரிமாணத்திற்கு முற்றிலும் தொடர்பற்றது. இவ்வாறிருப்பது கூட நோபல் குழுவின் முடிவுக்களுக்குக் காரணமாக இருக்கலாம்.
அவரது பெண் கதை மாந்தர்கள் குறித்தும் விமர்சிப்பவர்கள் உள்ளனர். பாலியல் செயல்பாடுகள் குறித்து அவரது படைப்புகள் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள இயலாதவர்கள் உண்டு. முரகாமியின் உலகம் நமது உலகிலிருந்து வேறுபட்ட விதிகளைக் கொண்டது. எனவே இக்கதை மாந்தர்களை நமது கருத்தியல்களின்படி அளவிடுவது முறையல்ல.
முரகாமியின் படைப்புகளில் பரவிக்கிடக்கும் மேற்கத்தியக் காலாசார வெளிப்பாடுகள் மற்றுமொறு காரணமாய் இருக்கலாம். மீண்டும் மீண்டும் அவரது கதை மாந்தர்கள் இக்கலாசாரத்தின் குறியீடுகளாக மட்டுமே உள்ளதாக நினைக்கக்கூடும். ஆயினும் முரகாமியின் லட்சோபலட்சம் வாசகர்களிடம் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்பது அளவிட முடியாதது. முரகாமியின் படைப்புகளைத் தொடர்ந்து வாசிக்கும் எவருக்கும் இக்கதை மாந்தர்களிடம் முரண்பாடுகள் இல்லை என்பதே நிதர்சனம்.
முரகாமியின் படைப்புகள் வெறும் வணிக நோக்கிலானவை எனவும் விமர்சிக்கின்றனர். நல்ல கலைப்படைப்பு என்பது பெரும் பொருள் ஈட்டித் தராது என்று நம்புவது கூட ஒரு விதத்தில் பழமைவாத மனநிலை தான். முரகாமி மில்லியன் காப்பிகள் விற்கிறார். அதனாலேயே அது தரமான இலக்கியம் இல்லை என்று சொல்வதெல்லாம் இன்றைய சூழலில் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
தெளிவான முடிவில்லாத கதைகள் முரகாமியின் மீது வைக்கப்படும் மற்றுமொறு விமர்சனம். ஆனால் முரகாமியின் வாசகர்கள் இக்கதையுடன் இரண்டறக் கலந்துவிடக் காரணமாய் அமைவதும் இவ்வாறான முடிவுகள் தான். முரகாமியின் வாசகர்கள், ஒரு கட்டத்தில் தங்கள் வாழ்க்கைக்கும் முரகாமியின் மாய உலகத்திற்கும் எளிதில் சென்று மீளும் பாலம் உள்ளது போலவே உணர்கின்றனர்.
முரகாமி பொதுவெளியில் அதிகம் பேட்டிகள் கொடுப்பதில்லை. அவர் பேசுவது குறைவு. அவரது படைப்புகள் தான் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கின்றன. இன்றைய சமூக ஊடக உலகில், தனிமை விரும்பியான முரகாமி, பரபரப்பான விஷயங்களை எழுதும் கவன ஈர்ப்பாளராக இல்லை. ஆனால் அவரது படைப்புகள் எண்ணற்ற வாசகர்களின் கவனத்தை அவர்பால் என்றென்றைக்கும் ஈர்த்து வைத்திருக்கின்றன.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறுவது உட்சபட்ச கௌரவம் தான். ஆனால் முரகாமியைப் பொறுத்தவரையில் அவரது ரசிகர்களுக்கும் அவருக்குமான தொடர்பு என்பது உலகியல் விருதுகளையெல்லாம் நம்பியில்லை. அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டால் அவரது ரசிகர்கள் மகிழ்வார்கள் தான். ஆனால் அவ்வாறு நிகழாதது அவர்கள் முரகாமியிடம் கொண்டிருக்கும் நேசத்திற்கு எந்தவிதத்திலும் குந்தகம் ஏற்படுத்தாது. அடர்ந்த காட்டில் மலரும் வாசமிகு பூவொன்று தன் அழகின் அங்கீகாரம் நாடி என்றுமே ஏங்குவதில்லை.
எழுத்து தனிமைச் செயல். ஓடுவதும் அதுவே. விரும்பிய இசையை ரசிப்பதும் தனிமைச் செயலே. வாசிப்பதும் தனிமைச் செயல். முரகாமி இவற்றை மட்டுமே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்கிறார். முரகாமியும் அவரது படைப்புகளும் தனிமையை ஆராதனை செய்வதாய் உள்ளன. ஹாருகி முரகாமி தன்னிகரில்லாத தனிமை நாயகன்.
Comments