Skip to main content

தாத்தா சொன்ன கதைகள்


உங்களுக்கு எம்.வி.வெங்கட்ராம் அவர்களைத் தெரியுமா? 


பத்து நாட்களாக அவருடன் தான் இருக்கின்றேன். ஆம். அவருடைய சிறுகதைகளின் முழுத்தொகுப்பாய் அவர் எங்கள் வீட்டிற்கு வந்து பத்து நாட்கள் ஆகின்றன. 

இதற்கு முன் அவரது நாவல்களான “காதுகள்”, “வேள்வித் தீ” ஆகியவற்றை வாசித்துள்ளேன். வேள்வித் தீ நாவலின் களம் சௌராஷ்டிர மக்களின் வாழ்வியல். பட்டு நெசவும் அதைச் சார்ந்த வாழ்க்கை முறையும் எனது சிறு வயதுச் சூழலுடன் ஒத்துப் போனதால் வேள்வித் தீ என்னை மிகவும் கவர்ந்தது. 


சிறுகதைகளுக்கு வருவோம். முழுத் தொகுப்பு ஆயிரம் பக்கங்களுக்கும் மேல். அவர் எழுதிய முதல் சிறுகதை “சிட்டுக் குருவி”. இரண்டு மூன்று பக்கங்கள் தான். வாசித்தபின், இக்கதை ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. சிலிர்ப்பூட்டுவது. எம்.வி. வெங்கட்ராம் அவர்கள் பதின் பருவத்திலேயே இந்தக் கதையை எழுதியுள்ளது மேலும் வியப்பு. 


ஒவ்வொரு கதையும் பேரனுபவம். வெறும் வார்த்தை விளையாட்டுக்கள் அல்ல. “குயிலி” என்றொரு கதை. உலகத் தரமானது. டிஸ்னி போன்ற நிறுவனங்களால் எடுக்கப்படும் 3D படத்தைப் பார்த்தது போன்றதொரு அனுபவம். பொதுவாகக்  கண் முன் கதை விரியும் என்பார்கள். ஆனால் குயிலி கதை நம்மைச் சுற்றிலும் வியாபிக்கிறது. 


நுண் மனஉணர்வுகளை, உறவுகளின் அரிதாரத்தை, நெகிழ்ச்சியான தருணங்களை, அகச் சிக்கல்களை, சுய விசாரணையை எழுத்தோவியங்களாகத் தீட்டுகின்றன இக்கதைகள். 


எம்.வி. வெங்கட்ராம் அவர்களின் தாய்மொழியும் சௌராஷ்டிர மொழி தானென அறிந்தபொழுது பெருமிதமாய் இருந்தது. ஆனால் சௌராஷ்டிர மக்கள் நிறைந்த எங்கள் ஊர் பரமக்குடியில் எவருமே எம்.வி.வெங்கட்ராம் அவர்களைப் பற்றிப் பேசிக் கேட்டதில்லை. அவரது புகைப்படத்தைக் கூட எங்கும் பார்த்ததாய் நினைவிலில்லை. என்ன செய்ய? அப்படித் தானே நிகழும்.


தாத்தா சொல்லிக் கொண்டிருக்கும் இக்கதைகள் வசீகரமானவை. பாட்டி தான் கதை சொல்ல வேண்டுமா என்ன? தாத்தாவும் சொல்லலாம் தானே. 


எனது தாத்தாவிடம் நான் பேசியதில்லை. பார்த்ததுமில்லை. எம்.வி. வெங்கட்ராம் ஐயாவின் கதைகள்மூலம் இவையிரண்டும் நடப்பது போலவே உணர்கின்றேன். எனது தாத்தாவின் பெயரும் வெங்கட்ராம் தான்.


#mvvenkatram #shortstories

Comments