உங்களுக்கு எம்.வி.வெங்கட்ராம் அவர்களைத் தெரியுமா? பத்து நாட்களாக அவருடன் தான் இருக்கின்றேன். ஆம். அவருடைய சிறுகதைகளின் முழுத்தொகுப்பாய் அவர் எங்கள் வீட்டிற்கு வந்து பத்து நாட்கள் ஆகின்றன. இதற்கு முன் அவரது நாவல்களான “காதுகள்”, “வேள்வித் தீ” ஆகியவற்றை வாசித்துள்ளேன். வேள்வித் தீ நாவலின் களம் சௌராஷ்டிர மக்களின் வாழ்வியல். பட்டு நெசவும் அதைச் சார்ந்த வாழ்க்கை முறையும் எனது சிறு வயதுச் சூழலுடன் ஒத்துப் போனதால் வேள்வித் தீ என்னை மிகவும் கவர்ந்தது. சிறுகதைகளுக்கு வருவோம். முழுத் தொகுப்பு ஆயிரம் பக்கங்களுக்கும் மேல். அவர் எழுதிய முதல் சிறுகதை “சிட்டுக் குருவி”. இரண்டு மூன்று பக்கங்கள் தான். வாசித்தபின், இக்கதை ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. சிலிர்ப்பூட்டுவது. எம்.வி. வெங்கட்ராம் அவர்கள் பதின் பருவத்திலேயே இந்தக் கதையை எழுதியுள்ளது மேலும் வியப்பு. ஒவ்வொரு கதையும் பேரனுபவம். வெறும் வார்த்தை விளையாட்டுக்கள் அல்ல. “குயிலி” என்றொரு கதை. உலகத் தரமானது. டிஸ்னி போன்ற நிறுவனங்களால் எடுக்கப்படும் 3D படத்தைப் பார்த்தது போன்றதொரு அனுபவம். பொதுவாகக் கண் முன் கதை விரியும் என்பார்...