இசை, புத்தகங்கள் மற்றும் பூனைகள் இவை முரகாமியின் உலகில் சிறப்புப் பிரஜைகள். ஹாருகி முரகாமி எழுதும் கதைகள் மட்டுமல்ல அவரின் வாழ்கைக் கதையே வசீகரமானது தான். எளிமையான வார்த்தைகளில் வாழ்கையின் பெருஞ்சிக்கல்களை அநாயாசமாகச் சொல்லிச் சொல்கிறார் முரகாமி. தனித்துவமானது முரகாமியின் உலகம். மாயமும் எதார்த்தமும், மாலை நேர வானில் தோன்றும் எண்ணற்ற வண்ணங்கள்போல, வடிவங்கள்போல ஒன்றிணைந்து ஜாலங்கள் செய்யும் உலகம் அது. வானம் என்றுமே புதியது தான். முரகாமியின் படைப்புகளும் அது போலவே. கனவுகளை, விரும்பும் வண்ணம் விழித்திருக்கும் போதே தன்னால் காண இயல்வதும், அவற்றை நிறுத்தவும் தொடரவும் முடிவதே தன் கதைகளின் தனித்தன்மைக்குக் காரணம் என்கிறார் முரகாமி. முரகாமி எழுதத் தொடங்கியதே ஒரு மாய நிகழ்வு தான். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தெட்டாம் ஆண்டு. பளிச்சென்ற ஏப்ரல் மாதச் சூரியன் டோக்கியோ வானில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. முரகாமி ஜிங்கு விளையாட்டரங்கிற்கு பேஸ் பால் ஆட்டம் பார்க்கச் சென்றிருந்தார். கூட்டம் அதிகமொன்றுமில்லை. புல்வெளியில் சாய்ந்தபடி ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தார் முரகாமி. ஆசிர்...